ராமநத்தம் அருகே பரபரப்புகடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

ராமநத்தம் அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடு போனது.

Update: 2023-09-09 18:45 GMT

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 55). இவர் பெரங்கியம் கைக்காட்டியில் பெட்டிக்கடை மற்றும் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறார். சேகர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சாமிக்கு சேர்த்து வைத்திருந்த உண்டியல் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் பக்கத்து ஊரான வாகையூர் பஸ் நிறுத்தத்தில் கோவிந்தராசு (60) என்பவரின் பெட்டிக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கடை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை?

இதுபற்றிய தகவல் அறிந்து ராமநத்தம் போலீசார் திருட்டு நடந்த கடை மற்றும் தீயில் எரிந்துபோன கடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டதோடு தடயங்களையும் சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மற்றும் மற்றொரு கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்