கோபி அருகே பரபரப்பு மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க.வினர் போராட்டம்

கோபி அருகே மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-24 20:51 GMT

கடத்தூர்

கோபி அருகே மதுக்கடையை மூடக்கோரி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூடக்கூடாது என மதுபிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூடக்கோரி போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே அயலூர் வெள்ளைப்பாறை மேட்டில் உள்ள மதுக்கடை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அனைவருமே விவசாய கூலித்தொழிலாளர்கள்.

இந்த நிலையில் இங்குள்ள ஆண்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி நாள்தோறும் தங்களுக்கு கிைடக்க கூடிய கூலி அனைத்தையும் மது குடித்து செலவு செய்து விடுவதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பா.ம.க.வினர் ஒன்று திரண்டு வெள்ளைப்பாறை மேடு பகுதிக்கு சென்று மதுக்கடையை திறக்கக்கூடாது எனவும் நிரந்தரமாக மூடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறக்க வேண்டும்

இதற்கிடையே அங்கு வந்த மதுபிரியர்கள் மதியம் 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்காததை கண்டு ஆத்திரம் அடைந்தனர். உடனே அவர்கள் கடையை மூடக்கூடாது என்றதுடன், கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் மதுக்கடையை மூடக்கோரி போராட்டமும், மறுபுறம் திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் கூறுகையில், 'இதுகுறித்து நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் தங்களுடைய போராட்டங்களை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மதுக்கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்