ஈரோடு கல்வித்துறையில் பரபரப்பு:2 பெண் அதிகாரிகள் தானாக முன்வந்து பதவி இறக்கம் பெற்றனர்பணிச்சுமை காரணமா?

ஈரோடு கல்வித்துறையில் 2 பெண் அதிகாரிகள் தானாக முன்வந்து பதவி இறக்கம் பெற்றனர்

Update: 2023-05-10 20:52 GMT

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 2 கல்வி அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து பதவி இறக்கம் பெற்று இருப்பது கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்ட கல்வித்துறை

ஈரோடு மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றாகும். இங்கு ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்த பெ.அய்யண்ணன் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராக பதவி ஏற்று உள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அதிகாரியாக ஜெ.ஏ.குழந்தைராஜன் பொறுப்பு ஏற்று உள்ளார்.

இதுபோல் ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளாக ஜோதி சந்திரா, பழனி ஆகியோர் உள்ளனர். ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை ஒன்றியங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக ஜோதிசந்திராவும் அதேபோல் அந்தியூர், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், தாளவாடி, பவானிசாகர் ஒன்றியங்களுக்கு பழனியும் உள்ளனர்.

வட்டார கல்வி அதிகாரிகள்

இவர்களின் கீழ் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா 2 வட்டார கல்வி அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்கள் செயல்பாடு, ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பு, நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்கள்.

மேலும் ஈரோடு வட்டார கல்வி அதிகாரிகளாக மேகலாதேவி, சந்தியா ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2 பேரும் ஒரே நேரத்தில் தானாக முன்வந்து பதவி இறக்கம் பெற்று, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் பொறுப்புக்கு சென்று உள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று முன்தினம் பெற்று இருக்கிறார்கள்.

தலைமை ஆசிரியராக...

மேகலாதேவி பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்துக்கும், சந்தியா கடம்பூர் மலையில் அத்தியூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் பணி மாறுதல் பெற்று இருக்கிறார்கள். 2 அதிகாரிகள் பதவி இறக்கம் பெற்று இருப்பது ஈரோடு மாவட்ட கல்வி துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளில் ஈரோட்டில் மிக சிறப்பாக பணியாற்றிய வட்டார கல்வி அதிகாரிகள் என்ற பெயர் மேகலாதேவிக்கும், சந்தியாவுக்கும் உண்டு. ஈரோடு வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகளை ஒருங்கிணைத்து சென்றதில் அவர்களின் பங்கு மிகப்பெரியது. குறிப்பாக நீண்ட காலமாக ஆசிரிய-ஆசிரியைகளில் பணி பதிவேடு முறைப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் அதனை சரி செய்து வருங்காலத்தில் ஆசிரியர்களுக்கு பிரச்சினை இல்லை என்ற நிலையை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.

பணிச்சுமை

ஆனால் அவர்கள் பதவி இறக்கம் பெற்றதற்கு கடுமையான பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு பணிகள் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி கல்வித்துறை அதிகாரிகளையே கடுமையாக பாதிக்கிறது. ஈரோடு வட்டாரத்தில் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் 2 வட்டார கல்வி அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். வட்டார கல்வி அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை. இதைப்பற்றி உயர் அதிகாரிகள் சற்றும் யோசிக்காமல் கடும் பணிச்சுமைகளை அதிகாரிகளுக்கு ஏற்றிக்கொண்டு வந்தனர். எனவே சிறப்பாக பணியாற்றிய அவர்கள், தங்கள் குடும்ப சூழல், உடல் பிரச்சினை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பதவி இறக்கம் பெற்று இருக்கிறார்கள். எனவே கல்வித்துறையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும், பணிச்சுமைகளை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுதான். வட்டார கல்வி அதிகாரி நிலை என்பது நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் தகுதிக்கு இணையானதுதான். எனவே தலைமை ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் பணியிட மாற்றம் பெற்று செல்வது வழக்கம். இதில் முக்கிய காரணம் எதுவும் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்