தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து 63 பவுன் நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டிற்குள் புகுந்து 63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் இருந்த பையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-07 14:01 GMT

திருச்சியில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டிற்குள் புகுந்து 63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் இருந்த பையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலதிபர்

சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் முகமது சம்சுதீனின் மனைவி பச்சிமுத்துஜெகரா (வயது 62). இவருக்கு திருச்சி வ.உ.சி. சாலை பாலாஜி அபார்ட்மெண்ட்டில் சொந்தமாக வீடு உள்ளது. பச்சிமுத்துஜெகரா 3 மாதங்களுக்கு ஒரு முறை திருச்சிக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் ராமநாதபுரத்தில் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் பச்சிமுத்துஜெகரா திருச்சிக்கு வந்தார். பின்னர் வங்கி பெட்டகத்தில் இருந்த 63 பவுன் நகைகளை எடுத்து தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.

63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் திருட்டு

பின்னர், கடந்த வாரம் ராமநாதபுரத்துக்கு நகைகளை போட்டுக்கொண்டு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நகைகளையும், ரூ.62 ஆயிரத்தையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு திருச்சிக்கு கடந்த 2-ந்தேதி காலை 11 மணிக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்த நேரத்தில், அவருடைய சகோதரி சர்புன்னிசா (50) அவரை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், தான் கொண்டு வந்த நகைகள், பணம் இருந்த பையை வீட்டின் உள்ளே இருந்த மேஜையின் மீது வைத்து விட்டு, பக்கத்தில் உள்ள அறையில் தனது சகோதரியுடன் பச்சிமுத்துஜெகரா பேசிக்கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பையில் உள்ள நகைகள், பணத்தை எடுத்து பீரேவில் வைப்பதற்காக பச்சிமுத்துஜெகரா சென்றபோது, மேஜையில் இருந்த பையை காணவில்லை. அதற்குள் யாரோ திருடிச்சென்றுவிட்டனர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவருடைய வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை எடுத்து பார்த்தனர்.

அதில் மர்ம நபர் ஒருவர் பச்சிமுத்துஜெகராவை பின்தொடர்ந்து வந்ததும், பின்னர், அவர் நகை, பணம் வைத்திருந்த பையை திருடிக்கொண்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பச்சிமுத்துஜெகரா கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, 63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்