நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-13 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டு வேலை இழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்" என்னும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று பயன்பெறலாம். அவர்கள், கொரோனா பெருந்தொற்று பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பியிருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தொழில் தொடங்க கடனுதவி

வணிக மற்றும் சேவைத்தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் இருக்கும். பயனாளர் தம் பங்காக, பொதுப்பிரிவு பயனாளர்கள் எனில் திட்டத்தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள் இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப்பிரிவினர் எனில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். அரசு, திட்டத்தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.2.5 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும். இத்திட்டம், மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். எனவே வெளிநாடுகளிலிருந்து கொரோனா பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் கொண்டோர் தம் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04146-223616, 9443728015 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்