புதர் சூழ்ந்த சுற்றுலா தகவல் மையம்

கூடலூரில் புதர் சூழ்ந்த சுற்றுலா தகவல் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-11-17 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் புதர் சூழ்ந்த சுற்றுலா தகவல் மையம் மீண்டும் செயல்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தகவல் மையம்

தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இணையும் இடத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரியானது சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள மாவட்டம் என்பதால் சுற்றுலா துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி மையமாக கூடலூரில் சுற்றுலா தகவல் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த காலங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் 2009-ம் ஆண்டு கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா தகவல் மையம் மாற்றப்பட்டது.

புதர் சூழ்ந்தது

இங்கு சுற்றுலாத்துறை அலுவலர் பணியாற்றினார். பின்னர் அவர் பதவி உயர்வு பெற்று திருப்பூருக்கு மாறுதலாகி சென்றார். அதன்பின்னர் காலி பணியிடம் நிரப்பப்படவில்லை. இதைத்தொடர்ந்து தகவல் மைய அலுவலகமும் மூடப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டிடமும் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. மேலும் சுற்றுலா சார்ந்த தகவல்களை பெற முடியாமல் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனனர். சில ஆண்டுகளாக அலுவலகம் மூடப்பட்டு கிடப்பதால் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

மேலும் இரவில் சமூக விரோதிகள் கூடும் இடமாக மாறி விட்டது. இதன் அடையாளமாக மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் பரவலாக தென்படுகிறது. எனவே சுற்றுலா தகவல் மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பராமரிப்பின்றி கிடக்கும் கட்டிடம் மற்றும் வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்