பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஈத்தாமொழி அருகே கோவில் திருவிழாவில் மின்விளக்கு அலங்கார பிரச்சினையில் பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈத்தாமொழி:
ஈத்தாமொழி அருகே கோவில் திருவிழாவில் மின்விளக்கு அலங்கார பிரச்சினையில் பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் திருவிழா
ஈத்தாமொழி அருகே உள்ள சுண்டபற்றிவிளையில் சிவசுடலைமாடசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு சுண்டபற்றிவிளை ஊர் வரிதாரர்கள் அந்த பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் மின்விளக்கு அலங்காரம் செய்துள்ளனர்.
போலீசில் புகார்
ஏற்கனவே சுண்டபற்றிவிளைக்கும் பக்கத்து ஊரான புத்தன் முகிலன்விளைக்கும் ஊர் எல்லை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கிடையே சுண்டபற்றிவிளை ஊர் வரிதாரர்கள் மின்விளக்கு அலங்காரங்கள் செய்துள்ளதை எதிர்த்து புத்தன்முகிலன்விளை ஊர் மக்கள் தங்களது எல்லைக்குள் அலங்காரம் செய்துள்ளதாக கூறி ஈத்தாெமாழி போலீஸ் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இந்த புகார் தொடர்பாக போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
இதனால், ஆத்திரமடைந்த புத்தன்முகிலன்விளை ஊர்மக்கள் நேற்று இரவு அந்த வழியாக சென்ற 2 அரசு பஸ்களை சிறைபிடித்து சாலையில் அமைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி மற்றும் ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் புத்தன் முகிலன்விளை ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்களை பொதுமக்கள் விடுவித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்கள் ஊர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரங்களை அகற்ற வேண்டும் என கூறினர். ஆனால், சுண்டபற்றிவிளை ஊர் மக்கள் தங்கள் பகுதியில் தான் மின்விளக்கு அலங்காரம் அமைத்துள்ளதாக கூறி அவற்றை அகற்ற மறுத்தனர். இரு தரப்பினரிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்தை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் குவிப்பு
இதனால், எப்போதும் ஆரவாரமாக நடைபெறும் சுண்டப்பற்றிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் திருவிழா பக்தர்கள் கூட்டமின்றி கலையிழந்து நடைபெற்று வருகிறது.இந்த சம்பவம் காரணமாக அசம்பாவிதங்கள் நடபெறாமல் இருக்க அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.