குமரி மாவட்டத்தில்சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும்மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியண்ட் தாஸ் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர் மெர்லியண்ட் தாஸ் கூறினார்.
மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
குமரி மாவட்ட பஞ்சாயத்துக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், கவுன்சிலர்கள் அம்பிளி, செலின்மேரி, பரமேஸ்வரன், லூயிஸ், ராஜேஸ்பாபு, ஜோபி, ஷர்மிளா ஏஞ்சல், ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி, சுற்றுலாத்துறை அதிகாரி சதீஷ்குமார், மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரி ராமசாமி, அதிகாரிகள் ராமநாதன், ஸ்டிபனோ கிரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஸ்கள் இயக்க வேண்டும்
கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை, மார்த்தாண்டத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம், அரசு ரப்பர் கழகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவை குறித்து விவாதித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ் பேசும்போது, குமரி மாவட்டம் கடல், மலை சார்ந்த மாவட்டமாகும். எனவே சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அதனால் குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிப்பதுடன், சுற்றுலாத்தலங்களை இணைத்து பஸ்கள் இயக்க வேண்டும் என்றார்.
பின்னர் கவுன்சிலர்கள் பேசும்போது, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். குமரி மேற்கு மாவட்டப் பகுதிகளில் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேர்க்கிளம்பி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாதாரண மக்கள் பதிவு செய்ய முடியவில்லை. சுற்றுலாவை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கைவிட வேண்டும்
இந்த கூட்டத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும்.குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுனர் மற்றும் இதர காலிப்பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்பிட வேண்டும். மேல்நிலைப்பள்ளி தேர்வில் 2022- 2023-ம் கல்வி ஆண்டில் சுமார் 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுத தவறியுள்ளனர். வருங்காலங்களில் இந்தநிலை ஏற்படாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் குடும்ப நலன் கருதி தனியார் மயமாக்குதலை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.