தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு வராமல் செல்லும் பஸ்கள்
திருவட்டாரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
திருவட்டார்:
திருவட்டாரில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வராமல் செல்வதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
திருவட்டாரில் உள்ள பஸ் நிலையத்தை நவீன முறையில் புதிதாக கட்டும் பணி தொடங்கியது. இதற்காக அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பஸ் நிலையம் மற்றும் கடைகள் கட்டும் பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது தரைமட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது.
பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியதை அடுத்து அதன் அருகே தபால் நிலையத்தையொட்டி மார்த்தாண்டம்-பேச்சிப்பாறை சாலையின் இருபுறமும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் தபால் நிலைய சந்திப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
தற்காலிக பஸ் நிறுத்தம்
இந்தநிலையில் புதிய பஸ் நிலைய பணிகள் நடைெபறுவதால் திருவட்டார் மீன் சந்தை அருகில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. அங்கு பயணிகள் நிழற்குடை, நேரக்குறிப்பாளர் அலுவலகம் போன்றவை உள்ளன.
இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஆரம்பத்தில் சிலநாட்கள் பஸ்கள் வந்து சென்றன. தற்போது இங்கு பஸ்கள் வருவதில்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
அத்துடன் பயணிகள் அதன் அருகில் ஒரு தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்து நிற்கின்றனர். எனவே, பஸ் நிலைய பணிகள் முடிவடைந்து பஸ் நிலையம் செயல்படும் வரை தற்காலிக பஸ் நிறுத்தத்தின் உள்ளே பஸ்கள் வந்து செல்லவும், நேரக்குறிப்பாளர் அலுவலகம் முறையாக செயல்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.