பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பஸ்கள்

குஜிலியம்பாறை பஸ்நிலையத்துக்குள் செல்லாமல் பஸ்கள் புறக்கணித்து வருகின்றன.

Update: 2023-05-15 17:05 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் குஜிலியம்பாறையும் ஒன்று. திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது. குஜிலியம்பாறையை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்குவதற்கு குஜிலியம்பாறைக்கு வருகிறார்கள்.

இதேபோல் வெளியூர் செல்வதற்கு குஜிலியம்பாறைக்கு வந்து, அங்கிருந்து பஸ் மூலம் செல்கின்றனர். இதுதவிர குஜிலியம்பாறையை சுற்றிலும் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் வியாபாரிகள், தொழில் அதிபர்கள் என பலரும் குஜிலியம்பாறைக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ் மூலம் குஜிலியம்பாறைக்கு வருகின்றனர்.

பஸ் நிலையம்

இந்தநிலையில் பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 1986-ம் ஆண்டு குஜிலியம்பாறையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு பஸ் நிலையம் முழுவதும் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு அதன் தரம் உயர்த்தப்பட்டது. இந்த பஸ் நிலையம் அதிக இடவசதியை கொண்டது. ஆனால் குஜிலியம்பாறை பஸ் நிலையம் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. பஸ் நிலையத்தில் நிழற்குடை, இருக்கைகள் என பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் குஜிலியம்பாறை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் அதையெல்லாம் அரசு பஸ் டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள் என எந்த பஸ்களை ஓட்டுபவர்களும் பின்பற்றுவதில்லை. பஸ் நிலையத்திற்கு வெளியே மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் பஸ்களின் வருகைக்காக வெயிலில் பயணிகள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மழைக்காலத்தில் நனைந்தபடி நிற்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் மெயின் ரோட்டில் பயணிகளை ஏற்றி, இறக்குவதால் திண்டுக்கல்-கரூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுதவிர பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வராததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கின்றனர்.

ஆனால் பஸ் நிலையத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பாளையம் பேரூராட்சி நிர்வாகமோ, அதிகாரிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே பொதுமக்கள், பயணிகளின் நலன்கருதி குஜிலியம்பாறை பஸ் நிலையத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை, இருக்கைகள் அமைக்க வேண்டும். மேலும் திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்கு சென்று, திரும்பிச்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெயிலில் காத்திருப்பு

இதுகுறித்து குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மணிமாறன் (அ.தி.மு.க. பேரூர் செயலாளர், பாளையம்) :- திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலையில் குஜிலியம்பாறை பஸ் நிலையத்தை தவிர்த்து வேறு எந்த ஊரிலும் பஸ் நிலையம் கிடையாது. இருந்த போதிலும் இந்த பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே சென்று வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மெயின் ரோட்டில் நீண்ட நேரம் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் உள்ளது. இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் சென்று வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சோமுராஜ் (பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர், குஜிலியம்பாறை) :- குஜிலியம்பாறை பஸ் நிலையம் கடந்த பல ஆண்டுகளாகவே பயன்பாடு இன்றி உள்ளது. இதனாலேயே தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கின்றனர். மேலும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுடன் பஸ் நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

சுமதி (குடும்ப தலைவி, குஜிலியம்பாறை) :- குஜிலியம்பாறை பஸ் நிலையம் தற்போது பெண்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று செல்வதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தை பயன்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்திற்கு சென்று வர பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்