புதிய வழித்தடங்களில் 4 பஸ்கள் இயக்கம்
பர்கூர் பஸ் நிலையத்தில் இருந்துபுதிய வழித்தடங்களில் 4 பஸ்கள் இயக்கத்தை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பர்கூர்:
திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் வேலம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும். ஊத்தங்கரையில் இருந்து படவனூர் ரெயில்வே கேட், ஒலைப்பட்டி வழியாக போச்சம்பள்ளி வரை இயக்கப்படும் டவுன் பஸ்சை பாரண்டப்பள்ளி புதூர், பூதனூர் வழியாக நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி நகரில் இருந்து ஜெகதேவி, பர்கூர் வழியாக மஸ்திகானூர் வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சை மரிமானப்பள்ளி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதே போல், கிருஷ்ணகிரியில் இருந்து பாலேகுளி, வேலம்பட்டி, கரடியூர் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சை போச்சம்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மதியழகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து அவர் 4 பஸ்களின் வழித்தடத்தை நீட்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். புதிய வழித்தடத்தில் நீட்டிக்கப்பட்ட பஸ்களின் தொடக்க விழா, பர்கூர் பஸ் நிலையத்தில் நடந்தது. மதியழகன் எம்.எல்.ஏ. புதிய வழித்தடங்களில் பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, பஸ் பயணிகளுக்கு, பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் மயில்வாகனன், செந்தில், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நிர்வாகிகள் மகேந்திரன், அறிஞர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.