3 கி.மீ. நடந்து செல்லும் அவலம்: புறநகர் பஸ்களை காணாத பாப்பிரெட்டிப்பட்டி-தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-10-07 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிபட்டி நகருக்குள் புறநகர் பஸ்கள் வராததால் பயணிகள் 3 கி.மீ. நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் கூடும் இடம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பாப்பிரெட்டிப்பட்டி உள்ளது. தாலுகா தலைமையிடமாக உள்ள பாப்பிரெட்டிப்பட்டியை சுற்றி துரிஞ்சிப்பட்டி, மோளையானூர், பையர்நத்தம், மெணசி, பூதநத்தம், மஞ்சவாடி, இருளப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாப்பிரெட்டிப்பட்டி நகரத்துக்கு பல்வேறு வேலைகளுக்காகவும், தொழில் தொடர்பாகவும் வந்து செல்கிறார்கள்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டு ஆகியவற்றிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். பாப்பிரெட்டிப்பட்டியில் கருவூலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தேசிய வங்கிகள், ஜவுளி கடைகள், பல்பொருள் அங்காடிகள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருவதால் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ளது.

நகருக்குள் வராத புறநகர் பஸ்கள்

இந்தநிலையில் சேலம்-அரூர் வழித்தடத்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான பஸ்களில் பெரும்பாலானவை பாப்பிரெட்டிப்பட்டி நகருக்குள் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் பைபாஸ் ரோடு வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்களுக்கு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் கிடைப்பதில்லை. பைபாஸ் ரோடு பகுதிக்கு சென்று பஸ்களை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதேபோல் அரூர்-சேலம் வழித்தடத்தில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு வருபவர்கள் பைபாஸ் சாலையில் இறங்கி வேறு வாகனங்களை பிடித்து பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிக்கு வரும் நிலை உள்ளது. இவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வரும் பொதுமக்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. நாள்தோறும் டவுன் பஸ்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

பாதுகாப்பற்ற சூழல்

கடத்தூர், பொம்மிடி பகுதியில் இருந்து திருவண்ணாமலை, சேலம், வேலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாப்பிரெட்டிப்பட்டி நகரில் இறங்கி அங்கிருந்து டவுன் பஸ் மூலமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ 3 கி.மீ. தூரம் சென்று சாமியாபுரம் கூட்டு ரோடு பகுதியில் இருந்து பஸ் பிடித்து செல்கிறார்கள்.

குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள கோர்ட்டுகளுக்கு சேலம், வேலூர் சிறைகளிலிருந்து கைதிகளை போலீசார் பஸ்களில் அழைத்து வரும்போது பைபாஸ் ரோட்டில் இறங்கி அங்கிருந்து பாதுகாப்பற்ற சூழலில் வேறு வாகனங்களில் பாப்பிரெட்டிப்பட்டி நகரப்பகுதிக்கு கைதிகளை அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. அரூர்-சேலம் இடையே பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சென்று வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பெரும்பாலானவை உரிய பர்மிட் இருந்தும் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிக்குள் வந்து பஸ் நிலையம் வழியாக செல்வதில்லை.

இதனால் கவுண்டம்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, பாப்பம்பாடி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சேலம், அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர் வாணியம்பாடி, வேலூர், திருவண்ணாமலை வழிதடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிக்குள் வந்து அதிகாரப்பட்டி வழியாக சென்று பைபாஸ் சாலையை அடையும் வகையில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகள் பாதிப்பு

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை, சேலம், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டிக்குள் வந்து சென்றன. பிறகு பைபாஸ் சாலை வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் மேற்கண்ட நகரங்களுக்கு செல்ல 3 கி.மீ. தூரம் நடந்தோ அல்லது வேறு வாகனங்களில் சென்றோ சாமியாபுரம் கூட்டு ரோட்டில் பஸ் பிடிக்க வேண்டும்.

குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இனியாவது பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்துக்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார பாதிப்பு

பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த சுந்தரம்:-

சேலம்-அரூர் வழித்தடத்தில் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டி நகருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் சாமியாபுரம் கூட்டு ரோட்டில் கால் கடுக்க பஸ்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. புறநகர் பஸ்கள் பாப்பிரெட்டிப்பட்டி நகருக்குள் வராததால் இங்குள்ள பஸ் நிலையம் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி நகரின் வணிகம், பொருளாதாரம் ஆகியவையும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்து புறநகர் பஸ்களும் பொதுமக்கள் பயணிகள் நலனுக்காக பாப்பிரெட்டிப்பட்டி நகருக்குள் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

பொம்மிடியை சேர்ந்த கீதா:-

பொம்மிடியில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் செல்ல வேண்டும் எனில் பாப்பிரெட்டிப்பட்டி சென்று அங்கிருந்து மாற்று பஸ்கள் மூலம் சாமியாபுரம் கூட்டுரோடு செல்ல வேண்டும். அங்கு காத்திருந்தாலும் பல நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் வேலூர் மற்றும் சேலத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பல்வேறு துறை பணிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களின் சேவைக்காகத்தான் பஸ் போக்குவரத்து என்பதை கருத்தில் கொண்டு பர்மிட் பெற்ற அனைத்து புறநகர் பஸ்களும் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்