திருப்பூரில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள்-மாணவிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ் டிரைவர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களுக்கு இலவச பயணம்
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தி.மு.க. தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி வழங்கினார். இதன்படி தி.மு.க. வெற்றி பெற்று முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இலவச பயண பஸ்களை பெண்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அந்த வகை பஸ்களின் வண்ணம் மாற்றப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழகம் முழுவதும் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் திருப்பூரில் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்களையும், மாணவிகளையும் புறக்கணித்து வருகின்றனர் அரசு பஸ் டிரைவர்கள். தொழில் நகரமான திருப்பூரில் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு தினமும் வேலைக்கு வந்து செல்கின்றனர். அதில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களாக இருப்பதால் அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இதேபோல் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளையும், இலவச பஸ் பாஸ் மூலமாக பயணிக்கும் பள்ளி மாணவிகளையும் பஸ்களில் ஏற்ற அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மறுக்கின்றனர்.
இலவச பயணம் என்கிற ஒரே காரணத்தை காட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி சென்று பஸ்களை நிறுத்துவது, பெண் பயணிகள் ஏறும்போதே பஸ்சை இயக்குவது, இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவது, டிக்கெட் கொடுக்கும் போது ஒரு சில கண்டக்டர்கள் கோபமாகவும், அநாகரீகமாகவும் ஒருமையில் பேசுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களையும், பிரச்சினைகளையும் பெண்கள் மற்றும் மாணவிகள் சந்தித்து வருகின்றனர்.
பஸ்சை நிறுத்துவதில்லை
இதுகுறித்து வீரபாண்டி பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன பெண் தொழிலாளி ஆனந்தி கூறியதாவது:-
நான் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். காலை பஸ் ஏறுவதற்காக நிறுத்தத்திற்கு வந்தால் பெண்கள் அதிகமாக நிற்பதை பார்க்கும் ஒரு சில அரசு பஸ் டிரைவர்கள் பஸ்சை நிறுத்தாமலே சென்று விடுகின்றனர். அப்படியே அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை இறக்கி விட வேண்டும் என்றால் சிறிது தூரம் தள்ளியே நிறுத்துகின்றனர். அதை பார்த்து அங்கு ஓடி சென்று ஏறும்போது அவசர, அவசரமாக பஸ்சை ஓட்டி செல்கின்றனர். ஆரம்பத்தில் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவிகளுக்கு தான் இந்த நிலைமை இருந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அனைவருக்குமே இந்த பரிதாப நிலைதான் உள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து வீரபாண்டி பகுதியை சேர்ந்த அரசு கல்லூரி மாணவி தேன்மொழி கூறும்போது:-
நான் திருப்பூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறேன். தினமும் காலையில் கல்லூரிக்கு போகும் போது எல்லா பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்டம் இல்லாத நேரத்திலும் பஸ்சை நிறுத்தி பெண்களை ஏற்ற தயங்குகின்றனர் என்று கூறினார்.
மாணவி
திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி பிருந்தா கூறும்போது"குடும்ப வறுமையை கருத்தில் கொண்டே அரசு பள்ளிகளில் படிக்கிறோம். இதற்காகவே அரசு, அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால் பள்ளிக்கு செல்லும்போதும் சரி, பள்ளிமுடிந்து விட்டு வீட்டிற்கு திரும்பும்போதும் சரி, நீண்ட நேரம் காத்திருந்தே வர வேண்டிய பரிதாப நிலை உள்ளது. பள்ளி விடும் நேரத்தில் 5 பஸ்கள் வந்தால் அதில் 1 பஸ் மட்டுமே நின்று மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும். பெண்கள் உள்பட அனைத்து பொதுமக்களுக்காகவே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது பெண்களுக்கு இலவச பயணம் என்பதை காரணம் காட்டி பெண்களை புறக்கணிப்பது வேதனையாக உள்ளது" என்று தெரிவித்தார்.
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்கிற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி தமிழக மக்களிடம் நன்மதிப்பை தமிழக அரசு பெற்றுள்ள நிலையில், அந்த திட்டத்தை தொடர்ந்து முழுமையாக நிறைவேற்ற தயக்கம் காட்டி வருகின்றனர் அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள். மேலும் இலவச பயணத்தை காரணம் காட்டி பெண்கள் மற்றும் மாணவிகளை பஸ்களில் ஏற்ற மறுப்பதை தெரிந்தும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சில கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளையும் அனைத்து பஸ்களும் முறையாக நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது போக்குவரத்து த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.