குப்பை கிடங்காக மாறி வரும் பயணிகள் நிழலகம்
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பயணிகள் நிழலகம் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதை சுத்தம் செய்து பராமரிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பயணிகள் நிழலகம் குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதை சுத்தம் செய்து பராமரிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு ஆஸ்பத்திரி
மயிலாடுதுறையில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு உள்ள பயணிகள நிழலகத்தை ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நோயாளிகளுடன் வருபவர்கள் இளைப்பாறுவதற்கும் இந்த பயணிகள் நிழலகம் பயன்பட்டு வருகிறது.
குப்பை கிடங்கு போல...
மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ள இந்த பயணிகள் நிழலகத்தில் தற்போது இருக்ககைள் உடைந்து யாருமே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த பயணிகள் நிழலகம் குப்பை கிடங்கு போல காட்சி அளிக்கிறது. இருக்கைகளுக்கு அருகில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழலகத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற பயணிகள் நிழலகம் பராமரிப்பின்றி கிடப்பது வேதனை அளிக்கிறது.
இந்த பயணிகள் நிழலகத்தை சுத்தம் செய்து, இருக்கைகளை புதிதாக மாற்றி உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.