செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி புராதன சின்னங்கள் இடம் பெறும் வகையில் பஸ் நிறுத்தம் வடிவமைப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி புராதன சின்னங்கள் இடம் பெறும் வகையில் பஸ் நிறுத்தம் சிற்ப கலைஞர்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-07-24 08:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி மாமல்லபுரம் இ.சி.ஆர். நுழைவு வாயில் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை புராதன சின்னம் வடிவில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் காகித கூழ் என்னும் கலவையை கொண்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. பல்லவர்களின் கலை நயத்தால் உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற பாராம்பரிய நினைவு சின்னங்கள் இடம் பெறும் வகையில் இந்த பஸ்நிறுத்தம் சிற்ப கலைஞர்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.

இங்குள்ள ஓட்டல்களில் தங்கும் வெளிநாட்டு செஸ் வீரர்கள் இந்த சாலையை கடந்து செஸ் போட்டி நடைபெறும் நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும்போது அவர்களை கவரும் வகையில் இந்த பஸ்நிறுத்தம் அழகுபடுத்தப்பட்டு வருவதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் பேரூராட்சியின் எல்லை பகுதி தொடங்கும் தேவனேரியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குழு சார்பில் 50 அடி உயரத்தில் 150 அடி அகலத்தில் பிரமாண்டமான விளம்பர பேனர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனர் கிழக்கு கடற்கரை சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இந்த போட்டி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள், அணிகள், வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கை குறித்த விவரம் இடம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்