மந்த நிலையில் ஏரியூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

Update: 2022-11-17 18:45 GMT

ஏரியூர்:

ஏரியூரில் மந்த நிலையில் நடக்கும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவாக முடித்து பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் ஒன்றாக ஏரியூர் விளங்குகிறது. ஊராட்சி ஒன்றிய தலைமை இடமான ஏரியூரை மையமாக கொண்டு 10 ஊராட்சிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஏரியூரில் பல்வேறு வணிக நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம், வணிகம், மருத்துவம், கல்வி சார்ந்த தேவைகளுக்கு ஏரியூருக்கு வந்து செல்ல வேண்டும்.

இதனால் தினமும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏரியூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஏரியூரில் இருந்து பல்வேறு முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய போக்குவரத்து மையமான ஏரியூரில் அனைத்து வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுவரை முடியவில்லை

இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி இதுவரை முடியவில்லை.

இப்போது இறுதி கட்ட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைவாக முடித்து ஏரியூர் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஏரியூரைச் சேர்ந்த சதீஷ்குமார்:- தினமும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் ஏரியூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முடிக்கப்படவில்லை. இதனால் ஏரியூரில் உள்ள சாலைகளிலேயே பஸ்களை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.

இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். பல்வேறு ஊர்களில் இருந்து ஏரியூருக்கு கூடுதலாக அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்க வாய்ப்பு ஏற்படும். எனவே பஸ் நிலைய கட்டுமான பணியை விரைவாக முடிக்க வேண்டும்.

கழிப்பறை வசதி இல்லை

புதுசோளப்பாடியைச் சேர்ந்த மணிகண்டன்:- ஏரியூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தின் இறுதி கட்டப்பணிகள் மந்த நிலையில் நடக்கின்றன. இதனால் பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கி நிற்க கூட உரிய இடமில்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இந்த பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கட்டப்படும் புதிய பஸ் நிலையத்தை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்