திண்டுக்கல்லில் பஸ் கிடைக்காமல் விடிய, விடிய காத்திருந்த பயணிகள்

திண்டுக்கல்லில் பஸ் கிடைக்காமல் விடிய, விடிய பயணிகள் காத்திருந்தனர்.

Update: 2023-04-14 19:00 GMT

தமிழ் புத்தாண்டு பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வாரவிடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்து வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். அதேபோல் 3 நாட்கள் விடுமுறையை வெளியூர்களில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் கழிப்பதற்கும் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் திண்டுக்கல் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே தீர்ந்து விட்டன. எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளில் முண்டியடித்து சென்றனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் படியில் அமர்ந்தபடி மக்கள் பயணித்து சென்றனர்.

இதனால் பெரும்பாலான மக்கள் பஸ்சில் செல்வதற்கு முடிவு செய்து, திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று இரவு 7 மணியில் இருந்தே பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் வெளியூர்களுக்கு திண்டுக்கல் வழியாக செல்லும் பஸ்களில் பெரும்பாலானவை வரவில்லை. மேலும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கூட்டம் அதிகமானது. திண்டுக்கல்லில் இருந்து வழக்கமான பஸ்களே இயக்கப்பட்டதால், அதில் ஏற முடியாமல் பயணிகள் தவித்தனர். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, கோவை, பொள்ளாச்சி, மதுரை சென்ற பஸ்களில் பயணிகள் நின்று கொண்டே பயணித்தனர். ஒவ்வொரு பஸ் வரும்போதும் 100-க்கும் மேற்பட்டோர் ஓடி சென்று முண்டியடித்து ஏறினர். இதனால் குடும்பத்துடன் வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்து விடிய, விடிய காத்திருந்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் காலையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ளக்குமுறலுடன் காத்து கிடந்து வேதனைபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்