பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலி

நாகர்கோவிலில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-05-07 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நண்பர்கள்

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் முருகன் (வயது 47), பெயிண்டர்.

இவருடைய நண்பர் விக்னேஷ் (31). டிப்ளமோ முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் விநாயகர் தெருவில் வசித்து வந்தார்.

நேற்று காலையில் முருகன் வெட்டூர்ணிமடத்தில் உள்ள உறவினர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் விக்னேசும் சென்றார். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டினார். விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.

பஸ் மோதி சாவு

வெட்டூர்ணிமடம் பகுதியில் சென்றடைந்த போது எதிரே வடசேரியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் அலெக்சாண்டர் என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி கொண்டது. அதில் பயணம் செய்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விக்னேஷ் உயிருக்கு போராடினார்.

இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உயிருக்கு போரடிய விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

கதறி அழுத உறவினர்கள்

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகன் உடலை கைப்பற்றினர்.

பின்னர் விக்னேஷின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

முருகன் மற்றும் விக்னேஷ் பலியான செய்தி கேட்டு அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இருவருடைய உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

சோகம்

மேலும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பலியான முருகனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் பலியான மற்றொருவரான விக்னேசுக்கு இன்னும் திருமணமாகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்