பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்; 45 பேர் காயம்

ஊத்தங்கரையில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 45 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-01-22 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 45 பேர் காயம் அடைந்தனர்.

பஸ்-லாரி மோதல்

தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டவர்கள் தை அமாவாசையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ்சில் சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

ஊத்தங்கரை கொல்லப்பட்டி அருகில் நள்ளிரவில் பஸ் வந்த போது மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த லாரியும், பக்தர்கள் சென்ற பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த ஆதி (வயது 46), கவிதா (24), பிரியதர்ஷினி (12), தர்மன் (25), அங்கம்மாள் (29) உள்பட 45 பேர் காயம் அடைந்தனர்.

தீவிர சிகிச்சை

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் படுகாயம் அடைந்த ஆதி, கவிதா, பிரியதர்ஷினி, தர்மன், அங்கம்மாள் உள்பட 16 பேர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.லேசான காயமடைந்த 29 பேர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சென்று திரும்பியபோது பஸ் விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்