அரசு பஸ் மோதி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் மோதி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-12 19:09 GMT

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் மோதி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு வந்தார்

நாகை மாவட்டம் வடுகூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது60). இவர் தன் பேரக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரது மருமகள் பிருந்தாவுடன் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டிக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தாா். சிகிச்சை முடிந்த பின் அண்ணாதுரை வடுகூருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் சென்ற அண்ணாதுரை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை, அவரது மருமகள் பிருந்தா , ஒரு வயது பேரக் குழந்தை கிறிஸ்டிகா உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் அரசு பஸ் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற செல்வம், சத்தியசீலன் மீதும் மோதியது. இதில் அவர்களும் படுகாயமடைந்தனர்.

சிகிச்சை

விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் முருகானந்தம் மயக்கம் அடைந்தார். அவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்