கிராமங்களுக்கு முறையாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி
உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முறையாக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அரசு பஸ்கள்
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற தேவைகளை ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்கள் பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக பஸ் போக்குவரத்து உள்ளது.
உடுமலை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை சார்பில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக பஸ்கள் முறையாக கிராமங்களை சென்று அடைவதில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாக உள்ளது. இது குறித்து உடுமலை கிளை நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. ஓட்டுனர், நடத்துனர் இல்லை, பஸ் பழுது போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி தட்டி கழித்து விடுகின்றனர்.
மாணவர்கள் அவதி
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் போக்குவரத்தை பெரிதும் நம்பி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக முறையான போக்குவரத்து வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உடுமலை மத்திய பஸ் நிலையம் மற்றும் கிராமப்புறங்களில் பஸ்சுக்காக மணிக்கணக்கில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்த பின்பு இது போன்ற குறைபாடு ஏற்பட்டு உள்ளது. அதுவரையிலும் கிராமப்புறங்களுக்கு தவறாமல் அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தது. போக்குவரத்து சேவை குறைபாட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அனைத்து கிராமங்களுக்கும் பழைய படிக்கு அரசு பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.