தானிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல பஸ் வசதி-மாணவிகள் மனு

தானிப்பாடி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆத்திப்பாடி, சின்னயம்பட்டி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மாணவிகள் மனு அளித்தனர்.

Update: 2023-08-21 17:29 GMT

தானிப்பாடி மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆத்திப்பாடி, சின்னயம்பட்டி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மாணவிகள் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பஸ் வசதி வேண்டும்

தானிப்பாடி மகளிர் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தனிப்பாடி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றோம். நாங்கள் தானிப்பாடி அருகில் உள்ள ஆத்திப்பாடி, சின்னயம்பட்டி, புளியம்பட்டி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தானிப்பாடி பள்ளியில் படித்து வருகின்றோம். நாங்கள் பள்ளிக்கு சென்று வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்

கீழ்பென்னாத்தூர் தாலுகா ராஜந்தாங்கல் கிராம பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், ''ராஜந்தாங்கலில் அரசு நேரடி மானிய நிதி உதவி தொடக்கப் பள்ளியில் கட்டிடம் முழுவதுமாக பழுதடைந்து இடியும் நிலையில் இருந்த காரணத்தால் பக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற பராமரிப்பில்லாத பூட்டப்பட்டிருந்த ஒரு வகுப்பறைக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் பாதிபேர் வகுப்பறையிலும், பாதி மாணவர்கள் மரத்தடியிலும் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு பல ஆண்டுகளாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே கற்பித்தல் பணியை செய்து வருகிறார். 13 வருடங்களாக அரசு நேரடி மானியத்தில் இயங்கி வரும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்றி தர வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்