சேலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பஸ் டிரைவர் கைது போலீசார் தீவிர விசாரணை
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூரமங்கலம்:
வெடிகுண்டு மிரட்டல்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.
அப்போது அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தலைமை பொறுப்பு வழங்கவில்லை என்றால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் மாநகர போலீசாருக்கும் மற்றும் சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சோதனை
இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் ஆகியோர் தலைமையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு ரெயில் நிலையம் மற்றும் பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பேன் என்று பேசிய நபரின் செல்போன் எண்ணை கொண்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
கைது
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிதம்பரம் உடையூர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 36) என தெரியவந்தது. மேலும் இவர் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து வினோத்குமாரை நேற்று காலை தாம்பரம் ரெயில்வே போலீசார் சென்னை சேலையூர் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.