ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதி 3 பேர் பலி: விபத்தில் சிக்கியவர்களை மீட்டபோது துயரம்

வேன்-டிராக்டர் மோதிய விபத்தில் சிக்கியவர்களை மீட்ட ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-06-05 20:51 GMT

பெரம்பலூர்,

திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). நெசவு தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர், உறவினர்கள் என மொத்தம் 10 பேருடன் சேர்ந்து தனது குலதெய்வ கோவிலான திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றார்.

நேற்று முன்தினம் காலை அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இரவில் அவர்கள், அதே வேனில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிராக்டரை வேன் டிரைவர் முந்த முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது.

விபத்தில் சிக்கினார்கள்

இதில் டிராக்டர் சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் வேன் சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குப்புசாமி, அவரது மகன் கணேசன் (42), கோபாலின் மனைவி நீலாவதி (65) மற்றும் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, சாமிபட்டியை சேர்ந்த சாமிதாஸ் (45), டிராக்டரில் வந்த முதுகளத்தூர் தாலுகா, பொந்தம்புளியை சேர்ந்த சேகர் (40), திலகன் (42) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.

ஆம்புலன்ஸ் மீது மோதல்

சாலையில் ஆம்புலன்சை திருப்பி நிறுத்திவிட்டு, விபத்தில் காயம் அடைந்தவர்களை டிரைவர் ராஜேந்திரன் ஸ்டிரெச்சர் மூலம் ஆம்புலன்சில் ஏற்றும் பணியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த குப்புசாமியை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு வேனில் வந்த சுப்ரமணியின் மகளும், ஆடிட்டர் அலுவலகத்தில் பணிபுரிந்தவருமான கவிப்பிரியா (22) உதவி செய்தார்.

அப்போது அதே சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் திடீரென சாலையின் மைய தடுப்புச்சுவரில் ஏறி வந்து சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இதில் ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அந்தரத்தில் பறந்து சாலையோரம் உள்ள அரிசி ஆலை சுற்றுச்சுவரில் மோதி, மழைநீர் வடிகாலில் விழுந்தது. இந்த விபத்தை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த சம்பவம் குறித்துதகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரன், குப்புசாமி, கவிப்பிரியா ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

கிரேன் உதவியுடன் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன், ஆம்னி பஸ் ஆகியவற்றின் டிரைவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்