லாரி மோதியதால் விபத்து; கொடைக்கானல் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்

தடுப்புச்சுவரில் மோதி பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.

Update: 2024-02-16 23:00 GMT

தேனி,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து தனியார் பஸ் ஒன்று கொடைக்கானல் நோக்கி நேற்று காலை 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை தாண்டிக்குடியைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 32) என்பவர் ஓட்டினார். இந்த பஸ்சில் 54 பேர் பயணம் செய்தனர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பஸ் சென்றது. டம்டம்பாறை கீழே பட்டப்பாறை அருகே சாலை வளைவில் டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிரே கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு வந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் மீது மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். ஒரு கட்டத்தில் பஸ் சாலையோர தடுப்பில் மோதி நின்று அந்தரத்தில் தொங்கியது. அப்போது பஸ்சில் டிரைவர் அருகே உள்ள முதல் இருக்கையில் அமர்ந்திருந்த தேனி மாவட்டம் பெரியகுளம் இ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா நகரை சேர்ந்த நித்யா (32) என்பவர் திடீரென முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு 200 அடி பள்ளத்தில் விழுந்தார்.

இதற்கிடையே அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பஸ் அந்தரத்தில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வத்தலக்குண்டு தீயணைப்பு படையினர், தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் பஸ்சில் சிக்கிய டிரைவர், கண்டக்டர், பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதில் டிரைவர் இளங்கோவன், பயணியான மதுரை அழகப்பா நகரை சேர்ந்த ராமர் (72) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நித்யாவை தேடினர்.

பின்னர் சுமார் 2 மணி தேடுதலுக்கு பிறகு அவரை கண்டுபிடித்தனர். அப்போது படுகாயங்களுடன் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை கயிறு கட்டி மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். நல்லவேளையாக தடுப்புச்சுவரில் மோதி பஸ் நின்றது.

இல்லையென்றால் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பெரும் விபத்து நடந்து உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்