விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 வழக்குகள் தொடர்பாக 4 அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.
திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் 4 வழக்குகள் தொடர்பாக 4 அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.
பனியன் நிறுவன உரிமையாளர்
அவினாசி துலுக்கமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 32). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 5-5-2018 அன்று மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வெங்கமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதி பலியானார். அவருக்கு இழப்பீடு கேட்டு திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்தநிலையில் கடந்த 17-11-2021 அன்று ரூ.33 லட்சத்து 82 ஆயிரத்து 672-ஐ மோகன்குமார் குடும்பத்துக்கு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் வைத்து ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுபோல் குன்னத்தூரை சேர்ந்தவர் குணசீலன் (36). பனியன் நிறுவன டெய்லர். இவர் கடந்த 17-9-2017 அன்று அரசு பஸ்சில் பயணம் செய்தபோது குன்னத்தூர் அருகே ஒச்சாம்பாளையத்தில் பஸ் விபத்துக்குள்ளானது. இதில் குணசீலன் இறந்தார். அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அவரது குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 350 வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 25-2-2020 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி கோவை கோட்டத்துக்குட்பட்ட அரசு பஸ் ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.
கல்லூரி மாணவி
பல்லடத்தை சேர்ந்தவர் தீபா (19). இவர் உடுமலையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 22-9-2016 அன்று காரில் தீபா சென்றபோது குடிமங்கலம் அருகே அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் விபத்து நஷ்டஈடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அவரது குடும்பத்துக்கு ரூ.16 லட்சத்து 99 ஆயிரத்து 899-ஐ விபத்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 20-1-2021 அன்று தீர்ப்பானது.
இழப்பீடு வழங்காததால் நீதிபதி ஸ்ரீகுமார் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் வைத்து கோவை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
திருப்பூர் ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5-11-2016 அன்று மோட்டார் சைக்கிளில் அவினாசி புதிய பஸ் நிலையம் முன் சென்றபோது அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவருக்கு ரூ.16 லட்சத்து 36 ஆயிரத்து 503-ஐ இழப்பீடாக வழங்க கடந்த 8-1-2021 அன்று உத்தரவானது. ஆனால் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோவை கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. மேற்கண்ட 4 வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.