மாளந்தூர் கிராமத்தில் புதைந்து கிடந்த ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு
மாளந்தூர் கிராமத்தில் புதைந்து கிடந்த ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் நேற்று தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாளர்கள் அரசுக்கு சோந்தமான புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட ராக்கெட் லாஞ்சர் ஒன்றை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ராக்கெட் லாஞ்சரை ஆய்வு செய்தனர். அது எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது எப்படி இங்கு வந்தது இதன் சக்தி என்ன என்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த பகுதியில் இன்னும் இதுபோல் வேறு ஏதேனும் ராக்கெட் லாஞ்சர் ஏதாவது உள்ளதா? என 'மெட்டல் டிடெக்டர்' மூலம் சோதனை மேற்கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக சோதனை மேற்கொண்டனர். இதன் பின்னர், வேறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக கொண்டு சென்றனர். அதனைத் திருவள்ளூர் அருகே கொண்டு சென்று செயல் இழக்க செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர். இந்த சம்பவம் இந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.