சுடுகாடு ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மணப்பாறை அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2022-09-28 20:06 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெரியகாலப்பட்டியில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சுடுகாட்டிற்கான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் கடும் சிரமம் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த இடப்பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்ற நிலையில் ஒரு சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட சுடுகாடாகவே நீதிமன்றம் அங்கீகரித்தது. இதனால் சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை சென்று சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் தனிநபர் அதில் தென்னை, எலுமிச்சை உள்ளிட்ட மரங்களை நட்டு விவசாயம் செய்து வருவதால் அதனை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதற்கிடையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரை அடக்கம் செய்திட வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டை மீட்டுத் தர வேண்டும் என்று இறந்தவரின் சமூக மக்களும், ஆதித்தமிழர் கட்சியினரும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததுடன் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் வரை உடலை அடக்கம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்து சுடுகாட்டின் அருகே திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி, வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட சுடுகாட்டில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததையடுத்து இறந்தவர் உடலை அடக்கம் செய்து விட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்