வாலிபரை ெகான்று முந்திரி தோட்டத்தில் உடல் புதைப்பு

துறையூர் அருகே வாலிபரை கொன்று முந்திரி தோட்டத்தில் உடலை புதைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-03 18:10 GMT

துறையூர் அருகே வாலிபரை கொன்று முந்திரி தோட்டத்தில் உடலை புதைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முந்திரி தோட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை அருகே தாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டம் உள்ளது. இந்த நிலையில் அந்த தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் பாதி புதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதை அந்த வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள் பார்த்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

கொலை

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் அந்த வாலிபரை அடித்துக்கொலை செய்து உடலை 1½ அடிக்கு குழிதோண்டி புதைத்துள்ளனர். மேலும் அதன் மீது புதர்களை போட்டு மூடி உள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் மழைபெய்ததால், மண் மற்றும் புதர்கள் விலகி உடல் வெளியே தெரிந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டையும் மற்றும் கையில் சில்வர் காப்பும் அணிந்து இருந்தார். அவர், யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

பெண் விவகாரம் தொடர்பா?

இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் அல்லது பெண் விவகாரம் தொடர்பாக மர்ம நபர்கள் வாலிபரை கடத்தி வந்து கொலை செய்தார்களா?, வேறு எங்காவது கொலை செய்துவிட்டு உடலை இங்கு கொண்டு வந்து புதைத்தார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேரிடம் விசாரணை

இந்நிலையில் இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்