அடுத்தடுத்து 2 அலுவலகங்களின் பூட்டை உடைத்து திருட்டு

குடியாத்தத்தில் அடுத்தடுத்து 2 அலுவலகங்களின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், பேப்பரில் சுற்றி வைத்திருந்த 100 கிராம் தங்க கட்டியை விட்டு சென்றுள்ளனர்.

Update: 2023-09-07 17:51 GMT

அடுத்தடுத்து திருட்டு

குடியாத்தம் கொசஅண்ணாமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமாரின் அலுவலகமும், அதன் அருகில் சித்த வைத்தியர் சிவக்குமார் என்பவருடைய அலுவலகமும் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் அலுவலகங்களை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை 7 மணி அளவில் வக்கீல் குமார் வந்து பார்த்தபோது அவருடைய அலுவலகத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.18 ஆயிரம், கால் கிலோ வெள்ளி விநாயகர் சிலை உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

100 கிராம் தங்க கட்டி தப்பியது

அதேபோல் சித்த வைத்தியர் சிவக்குமார், தனது நண்பரின் 100 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை பேப்பரில் சுற்றி தனது அலுவலகத்தில் வைத்திருந்தார். மர்ம நபர்கள் அவருடைய அலுவலகத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.12 ஆயிரத்தை எடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த குப்பைகள், மருந்து சீட்டுகளை கலைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த திருட்டு குறித்து குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கை ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.

பின் சித்த மருத்துவர் சிவக்குமார், தனது அலுவலகத்தை சுத்தம் செய்யும் போது அலுவலகத்தில் பேப்பரில் மடித்து வைத்திருந்த 100 கிராம் தங்க கட்டி அப்படியே இருந்தது. உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்