வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.;
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் வசந்தபிரபு (வயது 40). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் அருகே பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோருடன் கடைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு சென்றார். அப்போது தனது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியை மர்ம ஆசாமிகள் உடைத்து சேதப்படுத்தி, அதில் இருந்த தபால் உள்ளிட்ட ஆவணங்கள் எடுத்து சென்றிருப்பதும், வீட்டின் முன்வாசல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்த போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வசந்தபிரபு கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.