ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
பாளையங்கோட்டை கக்கன்நகரை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 13-ந்தேதி குடும்பத்துடன் திருப்பதிக்கு கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் வெள்ளி நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பேச்சிமுத்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.