குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்

சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

Update: 2023-05-22 16:57 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) டாக்டர் பிரசன்னகுமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 393 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஜீவாநகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கூலித்தொழில் செய்து வரும் எங்களால் வீட்டுவாடகை கொடுத்து குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

குண்டும், குழியுமான சாலைகள்...

வேலூர் மாவட்ட ஜனநாயக ஆட்டோ தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையில் காகிதப்பட்டறை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து சில மாதங்கள் ஆகிறது. ஆனாலும் அந்த சாலை சீரமைக்காமல், தார் சாலை போடாமல் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ஆற்காடு சாலையை உடனடியாக சீரமைத்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் மாநகராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் சுமதிமனோகரன் தலைமையில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன்நாதன், அரசு தொடர்புபிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தம் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், சத்துவாச்சாரியில் அமைந்துள்ள பிரசித்த பெற்ற கெங்கையம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. 18-வது வார்டில் உள்ள பள்ளித்தெரு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் முறையிடப்பட்டது. அவர்கள் கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு முன்பு தேர் செல்லும் சாலைகளை சீரமைத்து தருவதாக கூறினார்கள். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் மற்றும் மனுக்கள் அளித்தும் இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை. கோவில் தேர் திருவிழாவிற்கு முன்பாக தெருக்களை சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

கால்நடை மருத்துவமனை

வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகர் பொதுமக்கள் அளித்த மனுவில், ராம்சேட் நகரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு புதிதாக கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. எனவே கால்நடை மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

காங்கிரஸ் கட்சி நெசவாளரணி குடியாத்தம் நகர தலைவர் ஜெயவேலு அளித்த மனுவில், குடியாத்தம் தாலுகாவில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்குவது தொடர்பாக அனைத்து லுங்கி உற்பத்தியாளர்களையும் அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலஅலுவலர் ராமச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்