மாடு விடும் விழாவில் பார்வையாளர்களை முட்டித்தள்ளிய காளைகள்

கே..வி.குப்பம் அருகே நடந்த மாடு விடும் விழாவில் பார்வையாளர்களை, காளைகள் முட்டித்தள்ளியது. காளைகள் ஓடுவதற்கு பாதையின் குறுக்கே நின்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Update: 2023-01-23 18:00 GMT

முட்டித்தள்ளிய மாடுகள்

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில், நேற்று காளை விடும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஓடு பாதையின் இருபுறங்களிலும் சவுக்குக் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.

விதி முறைகளுக்கு உட்பட்டு கொண்டு வரப்பட்ட 156 மாடுகளில் 2 பசு மாடுகள், 2 குறைவான வயது உடையவை என 4 மாடுகள் திருப்பி அனுப்பப்பட்டன. 152 காளைகள் போட்டிகளில் பங்கேற்றன. மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது பாதுகாப்பு தடுப்புகளை மீறி ஓடுபாதையின் குறுக்கே நின்ற பார்வையாளர்களை மாடுகள் முட்டித் தள்ளின. இதில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்த 5 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். 12 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீஸ் தடியடி

பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதை பொருட்படுத்தாத பார்வையாளர்கள் காளைகள் ஓடுபாதையின் குறுக்கே நின்றனர். அவர்களை அவ்வப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உள்ளிட்ட போலீசார் தடியடி நடத்திக் கலைத்தபடி இருந்தனர். சிலர் பாதுகாப்புத் தடுப்புகள் மீது ஏறி விழுந்தும், காளைகள் ஓடி வரும்போது சிதறி ஓடியும், காளைகள் முட்டியும் காயம் அடைந்தனர்.ஸ சில காளைகள் பார்வையாளர்கள் மீது துள்ளிக் குதித்து பாய்ந்தது. இதில் காளைகளுக்கு அடியில் சிக்கிய பார்வையாளர்கள் கதறினர். கொம்புகளால் தூக்கி வீசப்பட்டவர்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓட்டம் பிடித்தனர்.

ஓடுபாதையின் குறுக்கும் நெடுக்குமாக நின்று தடுத்த பார்வையாளர்களால் வழி தெரியாமல் மிரண்டுபோன சில காளைகள் தவறி விழுந்து எழுந்து ஓடின. அப்போது 6 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டது. அதில் ஒரு காளைக்கு அதிக காயம்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூ.1½ லட்சம் பரிசு

லத்தேரி எல்.பி.பாபு என்பவரின் மாடு முதல்பரிசு வென்றது. முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1½ லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டன. சில மாடுகள் ஒரே கால அளவில் ஓடின. அதனால் அவற்றிற்கு உரிய பரிசுகளை சமமாகப் பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு போட்டி நடுவர்கள் உத்தரவிட்டனர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டதால் உணவுப் பொருள்களின் விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தாசில்தார் அ.கீதா, துயர்துடைப்பு தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி மோகனா, ஊராட்சி மன்றத் தலைவர் அமுதாகிரிராஜன், கால்நடைத் துறை மருத்துவர்கள், சகாதாரத்துறை டாக்டர்கள் முருகேசு, ஓமேஸ்வர், ஆய்வாளர்கள் ஆர்.செழியன், அருண்குமார், மதன்சிங், விமல், உடலியக்க மருத்துவர் அண்ணாமலை ஆகியோர் விழாவை கண்காணித்தனர்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தீ அணைப்பு, உள்ளிட்ட பல்வேறு துறையினர் தங்கள் குழுவினர்களுடன் வந்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்