வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திருவேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வடமலாப்பூரில் பிடாரி அம்மன், கருப்பர் சுவாமி கோவில்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி பிடாரி அம்மன் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
585 காளைகள் பங்கேற்பு
மாடுமுட்டி வீரர்கள் காயம் அடையாமல் இருப்பதற்காக காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் அணிவிக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 585 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வீரர்களும் சுழற்சி முறையில் 4 சுற்றுகளாக களம் இறக்கப்பட்டனர்.
21 பேர் காயம்
காளைகள் முட்டியதில், புதுக்கோட்டையை சேர்ந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ (வயது 52), ரெங்கமாள் சத்திரம் ராஜ்குமார் (19), மருதாந்தலை வெள்ளைச்சாமி (33), திருச்சி குமார் (34), தஞ்சாவூர் மணிகண்டன் (32), வாகைப்பட்டி விக்னேஷ் (20), புதுக்கோட்டை கவாஸ்கர் (19), நேதாஜி (21) உள்ளிட்ட 8 பார்வையாளர்கள், 8 காளையின் உரிமையாளர்கள், 5 வீரர்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், விழா குழுவினரால் ரொக்கப்பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரொக்க பரிசு வழங்கினார். ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை, அன்னவாசல், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமாேனார் வாகனங்கள், தடுப்பு கட்டைகள், மாடி வீடுகளில் நின்று கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஷியாம்ளா தேவி தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.