மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-05-06 18:00 GMT

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோனாப்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 16 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கோனாப்பட்டு ராசு மாட்டு வண்டியும், 2-ம் பரிசை வலையன்வயல் அறிவு மாட்டு வண்டியும், 3-ம் பரிசை தல்லாம்பட்டி மங்கையர்கரசி மாட்டு வண்டியும், 4-ம் பரிசை கானாடுகாத்தான் அருண் மாட்டு வண்டியும் பெற்றன.

பரிசு

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 11 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை கானாடு காத்தான் சோலை ஆண்டவர் மாட்டு வண்டியும், 2-ம் பரிசை திருமயம் வைஷ்ணவி இளவரசி மாட்டு வண்டியும், 3-ம் பரிசை தஞ்சை சிவந்திநாதபுரம் ராயந்தூர் பாலாஜி மாட்டு வண்டியும், 4-ம் பரிசை திருப்புனவாசல் தங்கராசு மாட்டு வண்டியும் பெற்றன.

பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை கோனாப்பட்டு- திருமயம் சாலையில் இருபுறமும் திரளான பொதுமக்கள் திரண்டு நின்று கண்டு ரசித்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்