மாட்டு வண்டி எல்கை பந்தயம்
திருமயம் அருகே மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
திருமயம் அருகே நெய்வாசல் கிராமத்தார்கள் சார்பில் திட்டானிக் கருப்பர் கோவில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு 19-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 61 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.
முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமாக பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிசாமி மாட்டு வண்டியும், 2-ம் பரிசை கோட்டையூர் அருணகிரி மாட்டு வண்டியும், 3-ம் பரிசை மூக்குடி வேலவன் மாட்டு வண்டியும், 4-ம் பரிசை பரளி சித்தார்த் மாட்டு வண்டியும் பெற்றன.
நடுமாடு பிரிவு
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் 16 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதன் பந்தயத் தொலைவு போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் முதல் பரிசை நெய்வாசல் மணி, 2-ம் பரிசு துளையானூர் ராமன், 3-ம் பரிசு தஞ்சை கூடல் நாணல் குலத்தாளம்மன், 4-ம் பரிசு நெய்வாசல் பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
சிறிய மாடு பிரிவு
இறுதியாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 33 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தூரமானது போய்வர 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் மாட்டு வண்டிகள் அதிகம் பங்கு பெற்றதால் பந்தயமானது 2 பிரிவாக நடத்தப்பட்டது.
இதில் முதல் பரிசை அறந்தாங்கி சாத்தையா, கள்ளந்திரி ஐந்து கோவில் சுவாமி, 2-ம் பரிசு நகரம்பட்டி வைத்தியா, கோனாபட்டு கொப்புடையம்மன், 3-ம் பரிசு இளங்காடு கோவிந்தன், பதினெட்டாங்குடி தனலட்சுமி, 4-ம் பரிசு நெய்வாசல் பெரியசாமி, ஆறாவயல் மெய்யப்பன் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
பரிசு
தொடர்ந்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற குன்றக்குடி சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
பந்தயத்திற்கான ஏற்பாடுகளை நெய்வாசல் ஊரார்கள் செய்திருந்தனர். திருமயம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.