ரூ.66.51 கோடியில் மருத்துவ கட்டிடங்கள்

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ரூ.66.51 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2022-08-21 17:02 GMT

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ரூ.66.51 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டத்தில் 1,924 இடங்களில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாகனம்பட்டி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து கலெக்டர் சாந்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் அமைச்சரிடம் எடுத்து கூறினர். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் ரூ.66 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பென்னாகரம், அரூர் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஒளி புகா அறை மற்றும் நவீன கருவிகள் வழங்கப்பட உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.23 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படும்.

அவசர சிகிச்சை பிரிவு

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். அரூர் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை கருவி வழங்கப்படும். தீர்த்தமலை, கடத்தூர், பையர்நத்தம், டி.துறிஞ்சிப்பட்டி, காரிமங்கலம் பகுதிகளில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். ரூ.9 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.

கிராமப்புற பகுதிகளில் உள்ள 40 துணை சுகாதார நிலையங்கள் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் நலப்பிரிவு அமைக்கப்படும். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய ரத்த சுத்திகரிப்பு எந்திரம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு சிகிச்சைக்காக நவீன உபகரணங்கள் வழங்கப்படும். இந்த மருத்துவமனையில் தொலை மருத்துவ சேவை தொடங்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.66 கோடி மதிப்பில் பணிகள் அறிவிக்கப்பட்டு நடந்து வருகின்றன.

கஞ்சா

தமிழகத்திற்கு ஆந்திரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவது விசாரணையில் தெரியவந்தது. தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை மூலம் ஆந்திர மாநிலத்தில் 6,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சாவை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4,000 கோடி ஆகும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பேரூராட்சி தலைவர் மனோகரன், துணை தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் டார்த்தி மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்