கட்டிட பொறியாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் கட்டிட பொறியாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் கட்டிட பொறியாளரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏ.டி.எம். மையங்கள் கொள்ளை சம்பவம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
ஆனால் கொள்ளை போன பணத்தில் தற்போது வரை ரூ.5 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.67 லட்சத்து 80 ஆயிரத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் நேற்று பட்டப்பகலில் துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
12 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், கட்டிட பொறியாளர்.
இவர் இன்று பகலில் ரூ.12 லட்சத்தை துணிப்பையில் எடுத்து கொண்டு தொழில் ரீதியாக மற்றொரு நபர் ஒருவருக்கு கொடுப்பதற்காக அவரது காரில் இடதுபுற சீட்டில் அந்த பையை வைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து உள்ளார்.
வேட்டவலம் சாலையில் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் இருந்த அவரது நண்பர்களை அவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அந்த இடத்தில் நின்று போன் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த பணப்பையை கொள்ளையடித்து கொண்டு தப்பியோடிவிட்டார்.
மீண்டும் காரின் அருகில் வந்த சுரேஷ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணப்பை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர சம்பவத்தினால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.