கட்டிட காண்டிராக்டர் படுகொலை

நெல்லையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கட்டிட காண்டிராக்டர் படுகொலை செய்யப்பட்டார். அந்த இளம்பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-25 20:28 GMT

பேட்டை:

நெல்லையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கட்டிட காண்டிராக்டர் படுகொலை செய்யப்பட்டார். அந்த இளம்பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கட்டிட காண்டிராக்டர்

நெல்லை பழையபேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் (வயது 63), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு வின்சென்ட் ராஜ் என்ற மகனும், ஜான்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. வின்சென்ட் ராஜ் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜான்சியின் கணவர் ஜேசுதாஸ் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.

ஜேக்கப் ஆனந்தராஜ் தனது மனைவி அன்னம்மாள், மகள் ஜான்சி மற்றும் பேரன், பேத்திகளுடன் அபிஷேகப்பட்டியில் வசித்து வந்தார்.

மாயம்

கடந்த 22-ந்தேதி காலை ஜேக்கப் ஆனந்தராஜ் நெல்லை டவுன் பகுதியில் நடக்கும் கட்டிட பணியை பார்ப்பதற்காக காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கிளம்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரது செல்போனுக்கு மனைவி அன்னம்மாள் தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மகள் ஜான்சி தனது தந்தையை காணவில்லை என்று டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேக்கப் ஆனந்தராஜை தேடி வந்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

நெல்லை டவுன், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஜேக்கப் ஆனந்தராஜின் கார் சுத்தமல்லி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை கைப்பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் வெங்கப்பன் குளத்தின் கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக, அந்த வழியாக சென்றவர்கள் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொலை அம்பலம்

உடனே மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தது ஜேக்கப் ஆனந்தராஜ் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவறாக நடக்க முயற்சி

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கொலையுண்ட ஜேக்கப் ஆனந்தராஜிடம் நரசிங்கநல்லூரை சேர்ந்த செல்வி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி காலையில் செல்வியின் வீட்டுக்கு சென்ற ஜேக்கப் ஆனந்தராஜ், செல்வியின் மகள் தேவியிடம் (வயது 28) பண உதவி செய்வது போல் பேசி தவறாக நடக்க முயன்று உள்ளார்.

அப்போது தேவிக்கும், ஜேக்கப் ஆனந்தராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு வந்த தேவியின் காதலன் சங்கரன்கோவிலை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப், தேவி ஆகியோர் சேர்ந்த ஜேக்கப் ஆனந்தராஜை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உள்ளனர். அதன்பிறகு அவரது உடலை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

பின்னர், ஜேக்கப் ஆனந்தராஜின் காரை பிரின்ஸ் ஜேக்கப் எடுத்து சென்று சுத்தமல்லி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு வந்து விட்டார். பின்னர் நள்ளிரவில் பிரின்ஸ் ஜேக்கப், தேவி இருவரும் சேர்ந்து ஜேக்கப் ஆனந்தராஜின் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று வெங்கப்பன் குளக்கரையில் வீசி உள்ளனர்.

அதன்பிறகு வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில், பிரின்ஸ் ஜேக்கப், ஜேக்கப் ஆனந்தராஜின் செல்போனை எடுத்துக்கொண்டு மதுரை சென்று அங்கிருந்து அவரது மகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வேறு நபர் போல் பேசி பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இளம்பெண்-காதலன் கைது

இதையடுத்து தேவி, அவரது காதலன் பிரின்ஸ் ஜேக்கப் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கட்டிட காண்டிராக்டரை இளம்பெண் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்