சாலை மறியல், வன்முறைக்கு இடையேஅமைதியான முறையில் நடந்த எருதுவிடும் விழா

Update: 2023-02-02 18:45 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே சாலை மறியல், வன்முறைக்கு இடையே அமைதியான முறையில் எருதுவிடும் விழா நடந்தது.

எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக பொதுமக்களின் சாலை மறியல் வன்முறையாக மாறியது. இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கோபசந்திரத்தில் எருதுவிடும் விழா தொடங்கியது. விழாவில் காமன்தொட்டி, சூளகிரி, பேரிகை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டிருந்தன.

போலீசார் குவிப்பு

மைதானத்தில் காளைகளை அவிழ்த்து விட்டதும், அவை துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சுற்றி சுற்றி வந்தன. அப்போது மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் காளைகளை விரட்டி சென்று மாடுகளை அடக்கி, கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்கள், அலங்கார தட்டிகளையும் பறிக்க முயன்றனர்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எருதுவிடும் விழா அமைதியாக நடந்து முடிந்தது. எனினும் அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்