பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

கூடலூர், பந்தலூரில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2022-06-06 13:21 GMT

பந்தலூர்

கூடலூர், பந்தலூரில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தொடர் மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே பி.எஸ்.என்.எல். கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கூடலூர், பந்தலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அப்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆனால் மின்தடை ஏற்பட்டவுடன், பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சேவை துண்டிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மழைக்காலம் தொடங்கி உள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அப்போது பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதற்கு காரணம், பேட்டரிகள் செயலிழந்து கிடப்பதுதான். இதனால் அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பிரச்சினைக்கு தீர்வு

எங்கள் பகுதியில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகம் உள்ளது. அவை ஊருக்குள் புகுந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை. மேலும் மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டால், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முடியவில்லை. மேலும் கணினிமயமாக்கப்பட்ட அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் அங்கு சேவைகளை பெற செல்பவர்கள் காத்துகிடக்கும் நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்