கிடப்பில் கிடக்கும் தொண்டுபட்டி கட்டுமான பணிகள்; நடவடிக்கை எடுக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி நகரில், பொதுஇடங்களில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட தொண்டுபட்டி கட்டுமான பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இந்த பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-08-15 18:45 GMT

கிடப்பில் கிடக்கும் தொண்டுபட்டி கட்டிடத்தை சுற்றி புதர்கள் வளர்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். 

கோத்தகிரி: கோத்தகிரி நகரில், பொதுஇடங்களில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட தொண்டுபட்டி கட்டுமான பணிகள் கிடப்பில் கிடக்கிறது. இந்த பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுஇடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள்

கோத்தகிரி நகரில் சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட பொது இடங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன.இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி மார்க்கெட், அரசு மருத்துவமனை வளாகம், தாசில்தார் அலுவலக வளாகம், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் தொடர்ந்து உலா வருவதால் அப்பகுதிகளில் பொது மக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகள் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை தாக்கி காயப்படுத்தியும் வருகின்றன. கால்நடைகளை பொதுஇடங்களில் திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுஇடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கட்டி, அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோத்தகிரி கடைவீதி பகுதியில் தொண்டுபட்டி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில், உடனடியாக தொண்டுபட்டி கட்ட வேண்டுமென அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இதன்படி பொதுஇடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து தொண்டுபட்டியில் கட்டி, உரிமையாளரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். மேலும் கால்நடையை பிடித்து தொண்டுபட்டியில் கட்டியது, அதற்கு உணவு அளித்ததற்கு உண்டான செலவையும் சேர்த்து வசூலிப்பார்கள். இதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், அந்த இடத்தில் தொண்டுபட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது.

கிடப்பில் போடப்பட்டது

ஆனால் சுற்றுப்புற சுவர்கள் மட்டும் கட்டப்பட்ட நிலையில் ஒருமாதத்தில் பல்வேறு காரணங்களால் தொண்டுபட்டி கட்டுமான பணி பாதியில் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டிடம் சேதம் அடைந்து சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகள், பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கேட்டால் சரிவர பதில் கூறுவது கிடையாது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பணியை ெதாடங்க வேண்டும்

கோத்தகிரி நகரில் பொதுஇடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு நடந்து சென்ற குழந்தையை பசுமாடு முட்டி தாக்கி காயப்படுத்தியது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் கிடக்கும் தொண்டுபட்டி கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி முடித்து, அங்கு பொதுஇடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அடைத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கால்நடைகள் பொதுஇடங்களில் சுற்றித்திரிவது கட்டுப்படுத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்