ஈரோட்டின் பெருமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தகல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மரணம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஈரோட்டின் பெருமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மரணம் அடைந்தாா் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தொிவித்துள்ளாா்.

Update: 2023-08-09 20:54 GMT

ஈரோட்டின் பெருமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்த கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புலவர் செ.ராசு

கல்வெட்டு அறிஞர் என்று என்று போற்றப்படுபவர் புலவர் செ.ராசு. இவர் ஈரோடு அருகே உள்ள வெள்ளமுத்துக்கவுண்டன் வலசில் ந.சென்னியப்பன்-நல்லம்மாள் தம்பதியருக்கு 2-1-1938 அன்று பிறந்தார். தொடக்கப்பள்ளியை திருப்பூரில் தொடங்கினார். ஈரோடு லண்டன் மிஷன் பள்ளி, ஈரோடு செங்குந்தர் உயர்நிலை பள்ளிக்கூடங்களில் பள்ளிப்படிப்பை முடித்தார். திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்துவான் பட்டம்பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.லிட் மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொங்குநாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1959-ம் ஆண்டு ஈரோட்டில் தமிழ் ஆசிரியராக பணியை தொடங்கினார். 1980-1982 -ல் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.பின்னர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி, கல்வெட்டு -தொல்லியல் துறை தலைவராக பணியாற்றினார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டுகளை ஆய்வு செய்து வந்தார். ஈரோட்டின் பெருமைகளை வெளி உலகுக்கு கொண்டு வந்த பெருமைக்கு உரியவர். மேலும் அறச்சலூரில் உள்ள சுமார் 1,800 ஆண்டுகள் பழமையான இசைக்கலெ்வெட்டினை கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு என்பது குறிப்பிடத்தக்கது. கொடுமணல் அகழ்வராய்ச்சியின் முதல் தூண்டுகோலாக இருந்தவர் அவர்.

இந்த நிலையில் புலவர் செ.ராசு நேற்று காலமானார். அவருக்கு வயது 85. கவுரி என்ற மனைவியும் ஆர்.ஜெயப்பிரகாஷ், ஆர்.செந்தில்குமார், ஆர்.ஜெயமோகன் என்ற மகன்களும் அவருக்கு உள்ளனர். மறைந்த புலவர் செ.ராசுவின் உடல் தகனம் நேற்று பெருந்துறை மின் மயானத்தில் நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உள்பட முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

முதல்-அமைச்சர் இரங்கல்

புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், 'புலவர் ராசு மறைவு குறித்து அறிந்து வருத்தமுற்றேன். பல கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளை பதிப்பித்து தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய அவரது மறைவு தமிழ் ஆய்வுலகத்துக்கு பேரிழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

கல்வெட்டு அறிஞர் ராசு மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அமைச்சர் மு.வெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவரும், பேரூராதினப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல் என்று போற்றப்படும் புலவர் ராசு உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். தற்போது அகழாய்வு நடந்து வரும் சங்க கால ஊரான கொடுமணம் (கொடுமணல்) கண்டறிந்தவர். தொன்மையான அரச்சலூர் இசைக் கல்வெட்டு (பிராமி) மற்றும் பாடல் வடிவில் பொறிக்கப்பட்ட அரிய கல்வெட்டான பழமங்கலம் நடுகல் மற்றும் பல முக்கியமான கல்வெட்டுகளை கண்டுபிடித்தவர். ராசு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்