`நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அண்ணன்- தங்கை

வேதாரண்யத்தில், ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன்-தங்கை இருவரும் நனவாக்கினர். `நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அவர்கள் இருவருக்கும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.;

Update: 2022-10-30 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில், ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன்-தங்கை இருவரும் நனவாக்கினர். `நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அவர்கள் இருவருக்கும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.

ஏழ்மையான குடும்பம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட நெய்விளக்கு வடகாடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(வயது 21), மகள் சுபஸ்ரீ (18).பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்்தார். இவர் சுமை தூக்கும்போது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பிறகு தையல் வேலை செய்தும், ஆடுகள் வளர்த்தும் ராணி குடும்பத்தை நடத்தி வருகிறார்.எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும் மகன், மகளை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக இரவு-பகல் பாராது தையல் தொழில் செய்தும், ஆடுகள் வளா்த்தும் தங்களது பிள்ளைகளை ராணி படிக்க வைத்தார். மனைவிக்கு தேவையான உதவிகளை வீராசாமியும் செய்து கொடுத்தார்.

மருத்துவக் கல்லூரியில் இடம்

பெற்றோரின் கனவை நனவாக்கும் வகையில் ஏழ்மையான சூழ்நிலையில் ஸ்ரீபரனும் அவருடைய தங்கை சுபஸ்ரீயும் ் நன்றாக படித்தனர். அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு உதவிபெறும் பள்ளியிலும், பின்பு தேத்தாகுடி தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்தனர்.தொடர்ந்து ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுபஸ்ரீயும், பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஸ்ரீபரனும் பிளஸ்-2 படித்து முடித்தனர். பின்னர் இருவரும் தஞ்சாவூரில் உள்ள ஒரு மையத்தில் `நீட்' ேதர்வுக்கான பயிற்சி பெற்றனர். அதனைத்தொடர்ந்து நடந்த `நீட்' தேர்வில் ஸ்ரீபரன் 438 மதிப்பெண்ணும், சுபஸ்ரீ 319 மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றனர்.மருத்துவ கலந்தாய்வில் சுபஸ்ரீக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீபரனுக்கு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அவர்களையும், அவர்களை நன்றாக படிக்க வைத்த பெற்றோரையும் அப்பகுதி மக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.

மட்டற்ற மகிழ்ச்சி

இதுகுறித்து வீராசாமி கூறியதாவது:-

எங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்ேதாம். சுமை ஒன்றை தூக்கும்போது எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியபோது எனது மனைவி மனஉறுதியோடு இரவு-பகலாக தையல் தொழில் செய்தும், ஆடு வளர்த்தும் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவருக்கு உறுதுணையாக நான் இருந்தேன். பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் எங்களை உற்சாகப்படுத்தியது. ஏழ்மையான சூழ்நிலையிலும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம்.அவர்களும் நன்றாக படித்து மருத்துவ கல்விக்கான `நீட்' தேர்வில் வெற்றி பெற்றனர்.தற்போது இருவருக்குமே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் கண்ட கனவு நனவாகப்போகிறது.

கல்லூரி கட்டணம்

அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் தற்போது வசித்து வருகிறோம். எங்களுக்கான சிறிய வீட்டில் கீற்று கூட போட முடியாமல் பிளாஸ்டிக் தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளோம். மழை பெய்யும்போது மிகவும் சிரமமாக உள்ளது.மருத்துவக்கல்லூரியில் இருவருக்கும் இடம் கிடைத்தாலும் அதற்கான கல்லூரி கட்டணத்தை எப்படி செலுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை.எங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரி கட்டணத்தை அரசோ அல்லது கல்வி ஆர்வலர்களோ ஏற்றால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்