அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை

வந்தவாசி அருகே அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-25 17:36 GMT

ஆரணி

வந்தவாசி அருகே அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கத்தியால் வெட்டி கொலை

வந்தவாசி தாலுகா ஆயிலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57), பொதுப்பணித்துறையில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். மேலும் இரவு நேரங்களில் நாடகங்களில் நடித்து வந்தார்.

இவருக்கும் இவரது தம்பி சிகாமணி (54) என்பவருக்கும் இடையே நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 17.8.2019 அன்று சுப்பிரமணி நாடகம் நடிப்பதற்க்காக ஆயிலவாடியில் இருந்து வந்தவாசிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிகாமணி கத்தியுடன் சென்று சுப்பிரமணியை வெட்டிக்கொலை செய்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகாமணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் ராஜமூர்த்தி ஆஜரானார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா இன்று தீர்ப்பு வழங்கினார்.

இதில் அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

அதனை தொடர்ந்து சிகாமணியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்