குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ராஜபாளையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-02 19:05 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமிரபரணி கூட்டு குடிநீர்

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் இருந்து சேத்தூர் செல்லும் முகவூர் சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. தற்போது 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தினசரி பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

மேற்கண்ட பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்துவதற்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பைப் லைன் அமைக்கப்பட்டு முகவூர் சாலை வழியாக செல்கிறது.

வீணாகும் தண்ணீர்

இந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் சரியான முறையில் அமைக்கப்படாததால் தொடர்ந்து தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.

இவ்வாறு குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க விரைவில் இரும்பு குழாய் பதிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்ப்பட்டு அதிகமான குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை உள்ளது.

இந்த தண்ணீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்பதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆதலால் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த குழாய்களை அகற்றி இரும்பு குழாய்கள் பதிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவா்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்