கோவில் பூட்டை உடைத்து பித்தளை மணி திருட்டு
கோவில் பூட்டை உடைத்து பித்தளை மணியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவர் அதே கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு பூஜையை முடித்துவிட்டு இரவு 7.30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கிரில் கதவின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த 20 கிலோ எடையுள்ள பித்தளை மணியை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 ஆயிரமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.