மூதாட்டி வீட்டை உடைத்து20பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை
கயத்தாறு அருகே மூதாட்டி வீட்டை உடைத்து 20பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே மூதாட்டி வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
மூதாட்டி
கயத்தாறு அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பாப்பாஅம்மாள் (வயது 70). கிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது மகள் சசிகலா(45). மாற்றுத்திறனாளியான இவர் பாப்பாமாள் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருந்து வருகிறார்.
மர்மநபர் கைவரிசை
எனவே, இரவில் பாப்பாமாள் மகள் வீட்டில் தூங்க செல்வது வழக்கம். சம்பவத்தன்று இரவும் வழக்கம் போல் தனது வீட்டை பூட்டிவிட்டு பாப்பம்மாள் மகள் வீட்டிற்கு தூங்க ெசன்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு பாப்பாமாள் ஜன்னல் அருகில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்துள்ளார். பின்னர் மர்மநபர் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மற்றும் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி ெசன்று விட்டார்.
போலீசார் வலைவீச்சு
மறுநாள் அதிகாலையில் வீட்டிற்கு சென்ற பாப்பம்மாள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்றுபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளை போனதை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து பாப்பம்மாள் நாரைக்கினறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் அந்த போலீசார் சம்பவ வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு தடயவியல் அலுவலர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபரின் ரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி வீட்டில் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.