வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை-பணம் திருட்டு
திருமயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விராச்சிலை மேலகட்டிடம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (வயது 54). இவர் தற்போது திருச்சி புத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் விராச்சிலையில் உள்ள வீட்டில் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அழகப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அழகப்பன் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டின் மாடியில் சென்று பார்த்தபோது, மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டு அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 8 பவுன் நகை, ரூ.16 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அழகப்பன் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.